|
|
 |
 |
|
வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி வடக்கு நோக்கி எழுந்தருளி அருளும், இத் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 23 வது தலமாகும். கோயிலின் நான்கு வாயில்களிலும் நெடுங் கோபுரங்களுடன் காணப்படும் இந்த ஆலயத்தின் ராஜ கோபுரம் 7 நிலைகளை கொண்டது. ஒரு சமயம், முக்கண்ணனை நோக்கி தவம் செய்ய வேண்டி, அன்னை பார்வதி காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த சோலையினை வந்தடைந்தாள். அன்னைக்குக் பணி செய்ய காமதேனுவும், அதன் புதல்விகளான பட்டி, விமலா, சபலா, நந்தினி ஆகிய நால்வரில், பட்டி இங்கு வந்து அன்னையின் தவத்துக்கு பல பணிவிடைகள் செய்தது. மண்ணை கொண்டு லிங்கம் செய்து, தனது கொம்புகளால் குளம் ஒன்றை உருவாக்கி, அக் குளத்தில் காவிரி, கங்கை போன்ற புண்ணிய நதிகளின் நீரை நிரப்பி அபிஷேகம் செய்ய உதவியது. தன் மடிப் பாலையும் லிங்கத்தின் மேல் சொரிந்து ஆராதனை செய்தது. பட்டியின் மட்டற்ற பக்தி கண்ட ஈசன், அதன் முன் தோன்றி அருள் புரிந்தார். பட்டி வழிபட்டதால் இங்கு பரமேஸ்வரன் "பட்டீஸ்வரன்" ஆனார், அனைத்து உயிர்களுக்கும் ஈசனின் கருணை ஒன்றே என்பதை உணர்த்தும் திருத் தலம் இது.
ஆலயத்தின் கருவறையின் வடக்கு பகுதியில், வட திசை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க வேண்டி, தானே முன் வந்து அழைக்க வருவதுபோல, தனது ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்து, ஆறடி உயரத்துடனும், மடிசார் புடவையுடனும், எலுமிச்சை மற்றும் ரோஜா மாலைகளுடனும், எண் கரங்களுடனும், முக்கண்களுடனும், காதுகளில் குண்டலங்களுடனும், புன்னகை வழியும் திரு முகத்துடனும், மகிஷனின் தலை மீது நின்ற வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறாள்.அன்னை தன் எட்டு கரங்களில், ஒரு கரத்தை அபயஹஸ்தமாகவும், மறு கரத்தை தன் இடை மீதும் கொண்டு காட்சி அளிக்கிறாள். மற்ற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் முதலிய ஆயுதங்கள் கொண்டு, இடப் பக்கம் நோக்கியுள்ள சிம்ம வாகனத்துடன் விளங்குகிறாள். மற்ற ஆலயங்களைப் போலன்றி, இங்கு அம்பிகை சாந்த சொரூபிணியாய் குடிகொண்டுள்ளாள். காளி, துர்க்கை சன்னதிகளில் அவளது சிம்ம வாகனம் வலப் புறம் நோக்கி இருக்கும். ஆனால், இந்த தலத்தில் இடப் புறம் நோக்கி உள்ளது. இது, அன்னையின் சாந்த சொரூபத்தை குறிப்பதாகும்.
பட்டீஸ்வரம் துர்க்கை தீமைகளை அழித்து, வெற்றியை அருள்பவள். பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரத்துவம் எய்தினார். போரில் வெற்றி பெற ஸ்ரீராமரும், அர்ச்சுனனும் துர்க்கையையே வழிபட்டனர். மகாபாரதத்தில் வன வாசம் மேற்கொள்ள தர்மரும் துர்கையையே வணங்கினார். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும் மூர்த்திகளின் அம்சமும், எமன், இந்திரன் போன்ற தேவர்களின் அம்சமும் தன்னுள் ஒருங்கே கொண்டவள் துர்க்கை. இவளை நினைத்து வழிபடுவதாலும், மந்திர ஜெபங்களை உச்சரித்து நிந்தனை செய்வதாலும் அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டும். மரண பயம் விலகும். எதிரிகளின் பிடியிலிருந்து விடுதலை கிட்டும். ராகு கால நேரங்களும், செவ்வாய், ஞாயிறு, வெள்ளி கிழமைகளும், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி திதிகளும் துர்க்கா பூஜைக்கு மிக உகந்தவை. பல்வளை நாயகி, ஞானாம்பிகை என்றெல்லாம் அழைக்கப்படும் இத்தல இறைவியை, ராகு பகவான் அனுதினமும் இங்கு வந்து, ராகு கால வேளைகளில் வழிபடுவதாக ஐதீகம். ஞான சம்பந்தர், "பட்டி சரம் ஏத்த வினை பற்று அழியும்" எனத் துவங்கும் தனது தேவார பதிகத்தில் இத்தல செழுமைகளையும், மக்கள் வாழ்க்கை முறைகளையும் பாடியுள்ளார்.
|
|
ஹனுமனால் கொண்டு வரப்பட்ட லிங்கத்தை, ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து தனது சாயாஹத்தி தோஷம் நீங்கப் பெற்றது இங்குதான். விசுவாமித்திரர், தன் காயத்தையே (உடலையே) திரியாக்கி " காயத்திரி மந்திரம் " சித்திக்கப் பெற்று, பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதும் இத் தலத்தில்தான். மார்க்கண்டேயர் வழிபட்ட பெருமையுடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத் திருத்தலத்தில், தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
வழிபாடும், பயன்களும்
ராகு மற்றும் செவ்வாய் தோஷங்களால் ஏற்படும் திருமணத் தடைகள் விலக துர்க்கையை வழிபடலாம். வீரத்தை வழங்கும் அம்பிகைக்கு "குங்குமம், செவ்வரளி, விஷ்ணுகிரந்தி" போன்றவை கொண்டு செய்யும் அர்ச்சனைகளும் மிகுந்த பலன் அளிக்கும். "எலுமிச்சம் பழ மாலை" துர்க்கை வழிபாட்டுக்கு மிகப் பயனளிப்பது. எலுமிச்சம் பழம் மின் காந்த ஆற்றல் உடையது. இதை கனிகளில் "ராஜ கனி" என்பர். 27,54,108,1008 என்ற எண்ணிக்கைகளில் துர்க்கைக்குக் எலுமிச்ச மாலை அணிவித்து வழிபட்டால், தீரா கஷ்டங்கள் தீரும். உக்கிரமான நோய்கள் தணியும். எலுமிச்சம் பழ மாலையை துர்க்கை விரும்பி அணிகின்றாள் என்கிறது "துர்க்கா சகஸ்ர நாமம்". பட்டு அல்லது நூல் புடவைகள் சார்த்தியும் அம்பிகையை வழிபடலாம்.
"செவ்வாய் தோஷம்" நீங்க அம்பாளை அரளி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்தோ, மாலை அணிவித்தோ வழிபடலாம். வில்வத்திலும், அரளியிலும் சிவ பெருமான் உறைவதாக ஐதீகம். இதனால், அங்காரகனான செவ்வாயின் தோஷம் நீங்கி, அம்மனின் அருள் கிட்டும். ஆயுள் நீடிக்கும். "குங்குமம்" வீரத்தை வழங்க வல்லது.எண்ணிய செயலை முடிக்கும் ஆற்றலையும், சக்தியையும் அருள்வது. "விஷ்ணுகிரந்தி" மலர்களால் சகஸ்ரநாமம் செய்தால் எதிரிகள் குறைவர். எதிர்ப்ப்புகளும் அகலும். துர்க்கைக்கு உகந்த மாலை அணிவித்து, புடவை சார்த்தி, பசுநெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, (வழிபடுபவரது வயதைக் கொண்ட எண்ணிக்கையுள்ள தீபங்கள் மிகச் சிறந்தது).
குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்தால் "ராகு, செவ்வாய் தோஷங்கள் நீங்கும்". தொழில் அபிவிருத்தி ஏற்ப்படும். குழந்தைப் பேறு கிடைக்க்கும். கல்வியில், கலைகளில் தேர்ச்சி பெறுவர். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.இத் தலத்தில் அமைந்துள்ள ஞனவாவி தீர்த்த குளக்கரையில், தல விருட்சமான "வன்னி மரம்" உள்ளது. இங்கு நாக, சர்ப்ப, களத்திர மற்றும் புத்திர தோஷங்கள் நீக்கும் "நாகர்கள்" பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். "திருமணமாகாத பெண்கள்" மஞ்சள் சார்த்தி, தீபம் எற்றுவதும், "குழந்தை பேறு" இல்லாதோர் தொட்டில் கட்டுவதும் இத் தல வழக்கம்.கோயிலுக்கு வட கிழக்கே, விசுவாமித்திரரால் உண்டாக்கப்பட்ட "காயத்திரி குளம்" உள்ளது. இங்கு நீராடினால் "வேண்டிய சித்திகள்" கிடைக்கும்.
|
|
பைரவர் சிவனின் வடிவம். இத் தலத்தில் அமைந்துள்ள பைரவர், சோழ மன்னர்களால் போற்றி வணங்கப்பட்டவர். நோயுற்றோர், கடன் சுமைகள் கொண்டோர், துஷ்ட கிரகங்களால் பிடிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப் பட்டோர் இந்த பைரவரை வணங்கி நலம் பெறலாம். தேய்பிறை அஷ்டமி "பைரவாஷ்டமி" எனப்படும். அன்றைய தினம், பைரவரை வடை மாலை சார்த்தி, தயிர் கொண்ட நைவேத்யத்துடன் சிறப்பு பூஜைகள் செய்வது மிகச் சிறப்பு. தம்பதியர் 6 பைரவாஷ்டமிகளில் சிவப்பு நிற மலர்களல் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய "குழந்தைப் பேறு" கிட்டும். "வளர்பிறை அஷ்டமியில்", மாலை நேரத்தில், வில்வ மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்ரமோ, சகஸ்ரநாமமோ செய்து, "11 பைரவ தீபங்கள்" எற்றி வழிபட "வறுமை நீங்கும்". 11 வாரங்கள் வழிபடுவது மிகுந்த பயன் அளிக்கும். "பைரவ தீபம்" என்பது, சிறிது மிளகினை சிறு துணியால் மூட்டை கட்டி, அதை பசுநெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவது (). "நவக்கிரக தோஷங்கள்" விலக, பைரவரை செவ்வரளி கொண்டு 9 வாரங்கள் சகஸ்ரநாமம் செய்யலாம்." இழ்ந்த செல்வம்" பெற
11 அஷ்டமிகள் பைரவ தீபம் ஏற்ற வேண்டும். சனீஸ்வர பகவான் தோஷம் நீங்க 9 சனிக் கிழமைகள் செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்தும், 4
பைரவ தீபங்கள் ஏற்றியும் வழிபடவேண்டும்
ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் விபூதி அபிஷேகம் செய்து, மிளகு வடை மாலை சார்த்தி அர்ச்சனை செய்தால் "திருமணத் தடைகள்" விலகும். 9 வாரங்கள் பைரவருக்கு அர்ச்சனை செய்து, நிவேதனங்கள் செய்தால் "தொழிலில் கஷ்டங்களும், தொல்லைகளும் தீரும்". நோய்வாய்பட்டோர் பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து, அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள "தீரா நோய்கள் தீரும்". வளர்பிறை அஷ்டமிகளில் சொர்ணாபிஷேகம் செய்தால் "வீட்டில் செல்வம் பெருகும்", தினமும் 108 முறை " ஓம் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ" என ஜெபிப்பது செல்வ வளம் தரும்.
|
 |
|
|